“முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான மருந்துகள் கையிருப்பில் உள்ள நிலையில் மருந்துகள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்…”
சென்னை சைதாப்பேட்டையில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோவில் திரு குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். தொடர்ந்து சைதாப்பேட்டையில் A-4 மருத்துவமனையை, மக்கள் பயன்பாட்டிற்கு அவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சமூகநீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்….
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே மருத்துவ துறை சார்ந்த புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு, நிறைவடைந்துள்ளன என்றார். முதலமைச்சர் மூலமாக அந்த புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன என்றும் 7.5% இட ஒதுக்கீட்டில் பயின்ற மாணவர்களுக்கு அந்தப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்திருந்தாா். மேலும் இது பற்றிய அறிவிப்பை 21-ஆம் தேதி நடைபெறக்கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையின் போது, வெளியிட இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளாா்.
மருத்துவ மாணவர்கள் ஐந்து ஆண்டுகளும் தமிழில் படிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, ”அதில் நிறைய சட்ட சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்ட மா.சுப்பிரமணியன், அதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படாமல் இருப்பதையும் அவை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் விளக்கினார்.”
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை என்ற விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, ”முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான Generic medicines விற்பனைக்கு வந்துள்ளன என்றும் கூட்டுறவு துறையோடு மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து செயல்படுத்தும் இந்த மருந்தகங்களில், மருந்து பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் மா.சு. உறுதிப்படத் தெரிவித்தார்.”
முதல்வர் மருத்தகத்தில் 75 % மருத்துகள் குறைவான விலையில் தான் விற்பனை செய்யப்படுவதாகவும் தற்போதுள்ள 206 வகை மருந்துகளுடன் மேலும் சில மருந்துகளை விற்பனை செய்ய கூட்டுறவு துறையிடம் பேசி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளாா். தமிழகத்திற்கு கூடுதலாக ஆறு மருத்துவக் கல்லூரிகள் வரும் என்றும், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் புற்றுநோய் நோயாளிகளுக்காக மருத்துவமனை விரிவுபடுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள், மானிய கோரிக்கையில் வெளியிடப்படும் என்றும் மா.சு. கூறியுள்ளாா்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு முதல்வர் நியமனம் விரைவில் நடைபெறும் எனக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி கீழ் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் மருத்துவ பணியிடங்களை நிரப்ப, நகராட்சித் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளாா்.
மருத்துவத்தில் தமிழ்வழிக் கல்வி: மாணவர்களிடையே வரவேற்பு – மா.சுப்பிரமணியன்