தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவராக தந்தை பெரியாரையும், வழிகாட்டியாக காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்டோரை ஏற்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் உரையாற்றினார். அப்போது, பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார் தங்களது கொள்கைத் தலைவர் என்றும், பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் தாங்கள் கையில் எடுக்கப் போவதேஇல்லை, அதில் தங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் விஜய் தெரிவித்தார். யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் தாங்கள் எதிரானவர்கள் இல்லை. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே தங்களுடைய நிலைப்பாடு என்று குறிப்பிட்ட விஜய், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூகசீர்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை உள்ளிட்ட பெரியார் சொன்ன இவை அனைத்தையும் த.வெ.க முன்னெடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும்,, மதச்சார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பச்சைத் தமிழர் பெருந்தலைவர் காமராஜரை த.வெ.கவின் வழிகாட்டியாக ஏற்பதாக விஜய் கூறினார். அடுத்ததாக தங்களின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் என குறிப்பிட்ட த.வெ.க தலைவர் விஜய், சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துபவர்கள் அம்பேத்கர் பெயரைக்கேட்டாலே நடுங்கிப்போய்விடுவார்கள் என்றும், அவரை த.வெ.கவின் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
பெண்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்று களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான் என பெருமிதம் தெரிவித்த விஜய், அந்தவகையில் நாம் இந்த மண்ணை கட்டி ஆண்ட பேரரசி வேலுநாச்சியார், இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அஞ்சலையம்மாள் ஆகிய இருவரும் த.வெ.காவின் கொள்கைத் தலைவர்கள் என்றும் தெரிவித்தார்.