திருவண்ணாமலையில் வரும் 27ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தீபத்திருவிழாவையோட்டி பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக ஆண்டு தோறும் சிறப்பு போருந்துகள் இயக்கி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா அச்சம் காரணமாக தீபத் திருவிழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தாண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லாத நிலையில் பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் வசதிக்கேற்ப சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீபத்திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. அதன்படி டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் வருகையை பொறுத்து அந்தந்த மாவட்டங்களில் பேருந்துகளை இயக்கவும் தயார் நிலையில் உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.