கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு சிகிச்சயளிக்க தேவையான மருத்துவ வசதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். முதலில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவமனைகளும், மருத்துவ உபகரணங்களும் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்தவகையில் இன்று ( வெள்ளிக்கிழமை) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பாக தானியார் ஊடகம்( இந்து தமிழ் திசை) மருத்துவமனை தரப்பில் நடத்திய விசாரணையில், மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியவர்களுக்கு அதனை முறிக்க மாற்று மருந்து கொடுக்க வேண்டும் எனவும், ஆனால் அந்த மருத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மாற்று மருந்து கொடுத்திருந்தால், மெத்தனால் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி நச்சுத்தன்மையாக மாறுவதை தடுத்திருக்கும் என்றும் கூறியுள்ளனர். மரக்காணத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டபோதே, இந்த மருந்தை வாங்கி கையிருப்பில் வைத்திருப்போம் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வரை அந்த மருந்து கையிருப்பில் இல்லாததால், கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனைக்கு வந்தோருக்கு சிகிச்சை கொடுக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்தனர்.
மேலும், 50க்கும் மேற்பட்டோர் மெத்தனால் அதிகமுள்ள சாராயம் குடித்து இறந்துள்ளதை குறிப்பிட்ட அவர்கள், சுமார் ரூ.50 லட்சம் செலவழித்து மாற்று மருந்தை வாங்கி வைத்திருந்தால் அதனை இந்த இக்கட்டான சூழலில் பயன்படுத்தி இருக்கலாம் எனவும் , இனியாவது அரசு அந்த மருந்தை வாங்கி கொடுப்பது அவசியம் என்றும் கூறினர். இதுமட்டுமின்றி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவ உபகரணங்களும், நெஃப்ராலஜி எனும் சிறப்பு சிறுநீரக மருத்துவரும் இல்லை என்று கூறுகின்றனர். இதன் கரணமாகவே பெரும்பாலானவர்களை மேல்சிகிச்சைக்காக சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதுவும் உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாயிற்று என்கின்றனர்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது : கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி திறந்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது என்றும், 5 ஆண்டுகள் ஆன பின்னர் தான் ஹீமோ டயாலிஸ் இயந்திரமும், நெஃப்ராலஜிக்கான சிறப்பு சிறுநீரக மருத்துவப் பேராசிரியரும் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். இதனால் தான், தற்போது பாதிக்கப்பட்டவர்களில் பலர் ஜிப்மர் உள்ளிட்ட வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.