திருவான்மியூரில் கோவில் கோபுரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சிவனடியார் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் நேற்று தூய்மை பணி நடைபெற்று வந்தது. இதில் கோவில் சுத்தம் செய்யும் பணியில் சுமார் 30 பேர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த 30 பேர்களில் கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவனடியார் பழனி (44) என்பவர் கோயில் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்துகொண்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சக பணியாளர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி பழனி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் சுத்தம் செய்த சிவனடியார் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.