தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா தனது பதவியை ராஜிநாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த யுவராஜா. இவர் அக்கட்சி தலைமை மீது நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுக – பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல், அதனைத்தொடர்ந்து தாமகா தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது போன்றவை யுவராஜாவுக்கு கட்சி தலைமை மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருக்கிறது. அத்துடன் மக்களவை தேர்தலில் தாமகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக உடனான கூட்டணியை உறுதி செய்ததில் இருந்தே யுவராஜா தமாகாவில் இருந்து விலகிவிடுவார் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தாமகா இளைஞரணி தலைவர் பதவியை யுவராஜா ராஜினாமா செய்துள்ளார். தமாகாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யுவராஜா கட்சியின் இருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட யுவராஜா தோல்வியடைந்தார். இந்நிலையில் தமாகாவில் இருந்து விலகியுள்ள உள்ள யுவராஜா அதிமுகவில் இணைவாரா? என அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.