Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: அதிமுக-வின் திட்டம் இதுதான்..!

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: அதிமுக-வின் திட்டம் இதுதான்..!

-

அப்பாவு

தமிழக சட்டப்பேரவை நாளை கூட இருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 3 நாட்களுக்கு ( பிப்ரவரி 15 வரை) நடைபெற்றது. கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதத்திற்கு பதில் அளித்து பேசியிருந்தார்.

இதனையடுத்து பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதிகளில் 2024 -25 ஆம் நிதி ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் அம்மாதம் 22ம் தேதிவரை நடைபெற்றது. அப்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் பதிலளித்துப் பேசினர்.

பின்னர் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படாமல் சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைத்திருக்கிறார். இந்த நிலையில் தமிழக அரசின் துறை வாரியான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், மானிய கோரிக்கைகளை நிறைவேற்றவும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-ந்தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். ஆனால் இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நாளை ( ஜூன் 20) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. நாளை கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே முதலில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ மறைந்த புகழேந்தியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. அத்துடன் நாளைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, பிறகு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் கூடும்.

தமிழக சட்டப்பேரவை

பொதுவாக சட்டப்பேரவை நிகழ்வுகள் காலை 10 மணிக்குத் தான் தொடங்கும். ஆனால் இந்த நிகழ்வுகளை காலை 9.30 மணிக்கே தொடங்குவதற்கான விதிகள் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை( 21ம் தேதி) சட்டப்பேரவை கூடும்போது இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும். அதன்பிறகு 22ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 5 மணிக்கு தொடங்கி 8 மணி வரையிலும் என மொத்தம் 16 அமர்வுகளாக நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியும், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தோல்வியடைந்துள்ளதால் அதுபற்றிய விமர்சனங்களும் இடம்பெறும். அத்துடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என்பது குறித்தும் அனல் பறக்கும் விவாதங்கள் எழக்கூடும்.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் அரங்கேறிவரும் கொலை – கொள்ளை சம்பவங்களை பட்டியலிட்டு பேசி சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கிளப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மேகதாது அணை விவகாரம், நெல் கொள்முதல் நிலையங்கள் பற்றாக்குறை, குடிநீர் பிரச்சனை, மின்வெட்டு என துறைசார்ந்த பிரச்ச்னைகளையும் எம்.எல்.ஏக்கள் பேச உள்ளனர்.

ஒவ்வொரு துறைவாரியான பிரச்சனைகளுக்கும் அந்தந்த அமைச்சர்கள் பதிலளித்துப் பேசுவர். கூட்டத்தொடரின் கடைசி நாளான 29ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு விரிவாக பதிலளித்து பேசுவார். அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி நிலைபாடுகளை மாற்றியுள்ளதால் அதுகுறித்து ஆளுங்கட்சியினர் விமர்சிப்பார்கள், அவர்களது விமர்சனங்களுக்கு எதிர்கட்சியினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் எனவும் தெரிகிறது. ஆகையால் இந்தக் கூட்டத்தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

MUST READ