இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க உரிய நவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தோருக்கு பின்வரும் நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அயலகத் தமிழர் நலத்துறையால் உடனடியாக உதவி எண்கள் வெளியிடப்பட்டு, அங்கு பாதிக்கப்பட்டுள்ளோர் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசை உதவி 6T60OT 5 GİT 8760248625, 9940256444, 9600023645 மூலமாகவும், மின்னஞ்சல் nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com மூலமாகவும் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் அங்குள்ள தமிழர்களிடம் தற்போது தொடர்பு கொண்டு, சுமார் எண்பத்து நான்கு (84) நபர்களின் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்கள் அங்கு மேற்படிப்புக்காகவும், திட்டப் பணிகளுக்காகவும் சென்றவர்கள். இதில் சில சுற்றுலா பயணிகளும் அடங்குவர். இவர்கள் பெர்சிபா (Beersheba), எருகாம் (Yeruham), பென் குரியான் (Ben Gurion), கிழக்கு ஜெருசேலம் (East Jerusalem), ஜெருசேலம் பல்கலைக்கழகம் (University of Jerusalem) மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகம் (Tel Aviv University) போன்ற இடங்களில் தங்கி உள்ளனர்.
இத்தகவல்கள் உடனடியாக ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு, அவர்களை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அங்குள்ள தமிழர்கள் தாங்கள் தற்போது நலமாக இருப்பதாகவும், தங்குமிடம் மற்றும் உணவுத் தேவைகளுக்கான சிரமங்கள் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளதோடு, தங்களுடன் தொடர்பில் இருக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்து காணொளி மூலமாக தகவல் அனுப்பியுள்ளனர். மேலும், அயலகத் தமிழர் நலத் துறை மூலம் இஸ்ரேலில் உள்ள தமிழர்களின் இங்குள்ள குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, நிலைமை குறித்து தொடர் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், அங்குள்ள சூழ்நிலை மற்றும் ஒன்றிய அரசின் ஆலோசனையின் அடிப்படையில் அவர்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.