2024 பொங்கல் பண்டிகை வரவுள்ளதை ஒட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.2000 ரொக்கம் வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் பொங்கல் பண்டிகையை சொல்லலாம். போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்களுக்கு பண்டிகை களைகட்டும். தமிழக மக்கள் பொங்கல் பண்டிகயை மகிழ்ச்சியுடன் கொண்டாட , அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுத் தொகுப்பானது பொருட்களாகவும், ரொக்கமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த அதிமுக ஆட்சியில் (2021ம் ஆண்டு) குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கமாகவும், கரும்பு, பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் தொகுப்பாகவும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரியில் அரிசி, ரவை, பருப்பு, கடுகு, சர்க்கரை, சீரகம், மிளகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், புளி, வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த தொகுப்பு வழங்கப்பட்டத்தில் ரூ.500 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றதாக அதிமுக குற்றம் சாட்டியது.
இதனையடுத்து நடப்பாண்டு அதாவது 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், 1,000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.. இந்தநிலையில் விரைவில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதையொட்டி இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அத்துடன் தற்போது ரேஷன் கார்டு அடிப்படையில் மகளிருக்கு ரூ. 1000 உரிமைத்தொகை வேறு வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை தொடர்பாகவே ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 2000 வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு பரிசுத் தொகுப்பாக ரூ.2000 வழங்கப்பட்டால், அது தமிழக மக்களுக்கு தித்திக்கும் செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை..