2014 முதல் 2022 ஆம் ஆண்டுகள் வரையிலான சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரை விருதுகளே அறிவிக்கப்படாமல் இருந்தன. இதனையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிலுவையிலிருந்த தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த ‘சின்னத்திரை விருதுகள்‘ வழங்கும் விழா கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. அதன்படி 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த தொடர், நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள், கதையாசிரியர், இயக்குனர், ஒளிப்பதிவு, சிறந்த வில்லன், குழந்தை நட்சத்திரம் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ.1 லட்சம் என 20 பேருக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டன. மேலும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நிலுவையில் உள்ள 2014 முதல் 2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.