குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் சார் பதிவாளர், துணை வணிக வரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2,540 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு வெளியிட்டது. குரூப்-2, 2ஏ முதனிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 5.81 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், குரூப்-2, 2ஏ முதனிலைத் தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் 29,809 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதனை தொடர்ந்து குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 8 மற்றும 23-ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் பங்கேற்பதற்கான ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், தங்களது ஹால் டிக்கெட்டுகளை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.