தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் ஆண்டுக்கு 2 முறை சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 34 சுங்கச்சாவடிகளில் மட்டும் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதால், கட்டண உயர்வு தள்ளிவைக்கப்பட்டது. மேலும் பாஸ்டேக் முறை தொழில்நுட்பத்தை கட்டயப்படுத்தி மேம்படுத்தும் பணி தீவிரமாக அமல்படுத்தபட்டதாலும் கட்டண உயர்வு அமலாகவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
மக்களவை தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 -ம் தேதி முடிந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
அதன்படி, ஆத்தூர், பரனூர்,சூரப்பட்டு, வானகரம், பட்டரைபெரும்புதூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் 4 முதல் 5 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று காலை வெளியாகியுள்ளது.
வானகரத்தை பொருத்தவரை, கார்கள் ஒரு முறை பயணிக்க ரூ.50-ல் இருந்து ரூ.55 ஆகவும், சென்று திரும்புவதற்கு ரூ.75-ல் இருந்து ரூ.80 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1,705-ல்இருந்து ரூ.1,750 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குட்டி யானை மினி லாரி போன்ற வாகனத்துக்கான பாஸ் கட்டணம் ரூ.2,760-ல் இருந்து ரூ.2,830 ஆகவும், கனரக கட்டுமான இயந்திரங்களுக்கு ரூ.9,060-ல் இருந்து ரூ.9,290 ஆகவும் உயர்ந்தபட்டுள்ளது.
இதேபோல, மற்ற இனங்களில் சுங்கக் கட்டணமும் உயர்ந்துள்ளது.
சுங்கக் கட்டண உயர்வின் காரணமாக, அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சுங்கக் கட்டண உயர்வை தளர்த்த வேண்டி கனரக வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.