ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் நாளை(நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஃபெங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ள புயலாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் , ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையொட்டி, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஏற்கனவே நாளை ( நவ.27) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.