நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து 13 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் காணப்படும். இந்த நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி களக்காடு – மண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியதால் அன்று முதல் 2-ஆம் தேதி வரை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் 3-ஆம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க விதித்த தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டது இந்நிலையில் தற்போது அருவியில் தண்ணீர் சீராக வருவதால் இன்று காலை முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். 13 நாட்களுக்குப் பின்பு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமா குளித்து மகிழ்ந்தனர்.