கனமழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இதன் நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் அருவிக்கு நீர்வரத்து சீராக இருந்து வந்தது. இந்த நிலையில், ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி இன்று கும்பக்கரைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் இன்று கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், பாம்பாறு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அருவிக்கு திடீரென நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அனைவரையும் வெளியேற்றினர். கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பிற்பகல் 2 மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்தும் உத்தரவிட்டனர்.