தாம்பரம் அபார்ட்மென்ட்டில் பயங்கரம்- காலையிலே அலறிய 18 குடும்பங்கள்
தாம்பரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பின் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் இருசக்கர வாகனங்கள், ஏசி இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன.
சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரி தாமஸ் தெருவில் 18 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் செய்ய மின்வாரியம் சார்பில் ட்ரான்ஸ்பார்மர் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை டிரான்ஸ்பார்மர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆயில் தெறித்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.
அப்போது டிரான்ஸ்பார்மர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமானது. கார் ஒன்று லேசான சேதம் அடைந்தது. அதுமட்டுமின்றி ஏசி இயந்திரம் ஒன்று வெடித்து சிதறியது. உடனே இந்த தீ விபத்து குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் ஆபத்தான நிலையில், டிரான்ஸ்பார்மர் உள்ளதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் என்ற அச்சத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனாலும் மின்வாரியம் அதை கண்டு கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.