நடந்தது நடந்ததாக இருக்கட்டும்- திருச்சி சிவா
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரம் ராஜா காலனி அருகே இறகு பந்து மைதானத்தை திறப்பதற்காக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று காலை சென்றபோது திருச்சி சிவாவை திருச்சி மாவட்ட திமுகவினர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கே.என் நேருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி அவருக்கு கருப்பு கொடி காட்டினர்.
இது தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பியவர்களை செசன்ஸ் கோர்ட் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென காவல் நிலையத்திற்குச் சென்ற திமுகவை சேர்ந்த காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ் துரைராஜ், திருப்பதி உள்ளிட்டோர் கருப்புக் கொடி காட்டியவர்களை காவல் நிலையத்திற்குள் வைத்து தாக்கினார்.
இந்நிலையில் திருச்சி சிவாவை, அவரது இல்லத்துக்கு சென்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் சமாதானப்படுத்தினார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “இருவரும் தத்தமது மனதில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும். நேரு ஆற்றுகிற பணியினை என்னால் ஆற்ற முடியாது. நாடாளுமன்றத்தில் நான் ஆற்றுகிறப் பணிகளை அவரால் ஆற்ற முடியாது. ஆனால், இருவரும் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவே அவரவர் தளத்தில் பணியாற்றுகிறோம்” என்றார்.