மீண்டும் சர்ச்சை வளையத்தில் டிடிஎஃப் வாசன்
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் தலைக்கவசத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Twin Throttlers என்னும் யூட்யூப் சேனல் மூலம் Moto Vlogging செய்து 2K கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமானவர்தான் டிடிஎஃப் வாசன். கோவையை பூர்விகமாக கொண்ட டிடிஎஃப் வாசன் பைக்குகளில் ஒவ்வொரு ஊராக சுற்றுலா சென்று தனது பயணங்களை வீடியோவாக யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். தனக்கென ஒரு இளம் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள டிடிஎஃப் வாசனின் யூட்யூப் சப்ஸ்கிரைபரின் எண்ணிக்கை மட்டும் 2 மில்லியனை தாண்டி உள்ளது. அதேசமயம் பலமுறை இவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக காவல்துறை வழக்குகளும் இவர் மீது பதியப்பட்டுள்ளன.
அண்மையில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற யூடியூபர் டிடிஎஃப் வாசன் வீலிங் செய்ய முயன்ற போது, நிலைத்தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து அவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைக்கவசத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் டிடிஎஃப் வாசன். ஐ.எஸ்.ஐ இல்லாத, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஹெல்மெட்டை பயன்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. டிடிஎஃப் வாசன் பயன்படுத்திய தலைக்கவசத்தின் மதிப்பு ஒன்றரை லட்ச ரூபாயாகும்.