டங்ஸ்டன் கனிம நிறுவனத்திற்கு எதிராக 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் எனும் கனிம சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வல்லாளபட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் ஏழு மலைகளை உள்ளடக்கிய பகுதி பல்லுயிர் வாழும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இப்பகுதியில் வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் எனும் கனிம சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று மூன்றாவது கட்டமாக வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், வல்லாளபட்டி, நாயக்கர் பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலந்து கொண்ட அனைவரும் ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் எனவும் மாநில அரசு திட்டத்திற்கு எவ்விதமான ஒத்துழைப்பும் வழங்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில அரசு அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டத்தை ஒட்டி இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.இந்த போராட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மேலூர் வர்த்தகர்கள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இதனால்தான் நயன்தாராவிற்கு ஆதரவு கொடுத்தேன்….. நடிகை பார்வதி பேட்டி!