Homeசெய்திகள்டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதை  திரும்பப் பெற கனிமொழி வலியுறுத்தல்!

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதை  திரும்பப் பெற கனிமொழி வலியுறுத்தல்!

-

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா நிறுவனத்தின், துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராடி  வருகின்றனர்.

kanimozhi

இதனிடையே, மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது, எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்து வருவதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா-இந்துஸ்தான் ஜிங்க் ஆலைக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட்

மத்திய அரசின் இந்த நடவடிக்கை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் நிகழ்ந்த சுற்றுச்சூழல் அழிவு மற்றும் மனித துன்பங்களின் வரலாற்றை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், டங்ஸ்டன் சுரங்கமானது உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளை அழித்து, சமூகங்களை இடமாற்றம் செய்து, மக்களின் உரிமைகளை மீறும் என்றும் கனிமொழி எச்சரித்துள்ளார். மேலும், உள்ளூர் மக்களின் குரலுக்கு மதிப்பளித்து இந்த முடிவை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

MUST READ