டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததாக, எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்பி வருவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம் அளித்துள்ளதாகவும், இந்த கிராமங்களில் வாழக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதரம் இந்த சுரங்கப் பணிகளால் பாதிக்கப்படும் என்பதால், இந்தப் பகுதி மக்கள் இதை எதிர்த்து போராட்டங்களை மேற்கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய எந்த சுரங்கப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்று உறுதி அளித்துள்ளதாகவும், சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததாக, விஷமத்தனமான வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர் வருவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சருக்கு கடந்த 3.10.2023 அன்று கடிதம் எழுதியுள்ளதாகவும், துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், அரிட்டாபட்டி பகுதியானது ஒரு பல்லுயிர் பெருக்க வரலாற்றுத் தலம் என்பதை ஒன்றிய அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளதாகவும், ஆனால் இவற்றை கருத்தில் கொள்ளாத மத்திய அரசு தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாட்டினையும் கண்டு மிரண்டு, ஒன்றிய அரசும், அதனோடு சேர்ந்து இரட்டை வேடம் போடக்கூடிய எதிர்க்கட்சிகளும், மக்களின் கவனத்தை திசை திருப்பு முயற்சித்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.