தவெக மாநாட்டிற்காக பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடிகர் விஜய்யின் தவெக மாநாடிற்காக ஒட்டுமொத்த தமிழகமுமே காத்துக்கிடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்காக விக்கிரவாண்டி வி.சாலை பகுதி கடந்த 2 நாட்களாகவே விழாக்காலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவருமே தவெக மாநாட்டை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாநாட்டில் 45 நிமிடங்கள் விஜய் உரையாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் என்ன பேசப்போகிறார்? விஜய்யின் அரசியல் கொள்கை என்ன? அவரது அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதேபோலவே மாநாட்டிற்கான ஏற்பாடுகளும் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு 85 ஏக்கர் பரப்பளவில் மாநாடு திடல் அமைக்கப்பட்டுள்ளதில். பிரம்மாண்ட அரங்கமும், தனித்தனியாக பிரிக்கப்பட்ட 48 அரங்குகளும் உள்ளன. லட்சக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காவல்துறையினர் அனுமதியளித்துள்ள 50,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. இதில் முதல் 500 இருக்கைகள் முக்கிய தலைவர்கள் , நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன் அரங்கிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரங்கிலும் 1500 இருக்கைகள் வீதம் போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரங்கிலும் 2 குடிநீர் டேங்குகள் வீதம் மாநாடு திடலைச் சுற்றி 300 குடிநீர் டேங்குகள், அதேபோல் ஒவ்வொரு அரங்கிற்கு அருகிலும் ஆண்கள், பெண்களுக்கு என 2 மொபைல் டாய்லெட்டுகள் வீதம் 600 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளனர். 200 ஏக்கர் பரப்பளவில் கார்கள், பேருந்துகளுக்கு என 4 பிரத்யேக பார்க்கிங் மைதானமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் போதாது என்கிற சூழலில் பொதுமக்கள் நின்று பார்வையிட ஏதுவாக இருக்கைகளைச் சுற்றி தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகளை அனைவரும் எளிதாக பார்க்கும் வகையில் ஆங்காங்கே 72 எல்.இ.டி திரைகள் வைக்கப்படுள்ளன. மாநாடு திடல் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 மருத்துவ முகாம்கள் மற்றும் 150 மருத்துவர்கள், 150 மருத்துவப்பணியாளர்கள், 20 ஆம்புலன்ஸ்கள் மாநாட்டுத்திடலில் தயார் நிலையில் உள்ளன.
6,000 போலீஸார் பாதுகாப்பு வழங்க உள்ள நிலையில், 15,000 தனியார் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூட உள்ளதால் பிரத்யேக மொபைல் டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திடலில் உள்ள ஒவ்வொரு அரங்கிலும் கியூ ஆர் கோடு அடங்கிய பதாகை வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதனை ஸ்கேன் செய்துவிட்டு உள்ளே சென்று அமர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எத்தனைபேர் மாநாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
அத்துடன் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் தொப்பி அணிந்து வம்படியும், குடை எடுத்துவருமாறும் அறிவுறுத்தல் வழங்கப்படுள்ளது. மாநாட்டிற்கு வரும் பிரபலங்கள் ஓய்வெடுக்க 5க்கும் மேற்பட்ட கேரவன்களும் திடல் அருகே வரிசைகட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 5 லட்சம் பேருக்கு விநியோகிக்கும் வகையில் பிஸ்கேட், ஸ்நாக்ஸ், ஒரு தண்ணீர்பாட்டில் அடங்கிய பை ஒவ்வொருவருகும் வழங்கப்பட உள்ளது. வெயில் காரணமாக பலருக்கும் நீரிழப்பு ஏற்படலாம் என்பதால் அவர்களுக்கு உடனடியாக குளுக்கோஸ் ட்ரிங் வழங்கவும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஏற்பாடுகள் அனைத்து பிரம்மாண்டமாக, மிக கவனமாக ஏற்பாடு செய்யப்படிருக்கிறது.