தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குவிந்து வருவதால், கோயம்பேடு பகுதி முழுவதுமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருந்த அவர், “தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
சிறந்த மனிதநேயர் – துணிச்சலுக்கு சொந்தக்காரர் – தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் – முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அவருக்கும் , அவர் மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்புக்குரிய நண்பர்.
நடிகர் சங்கத் தலைவராகவும் – எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும் – அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் – தே.மு.தி.க தொண்டர்கள் – நண்பர்கள் – திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.