16 வது நிதிக் கமிஷன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் 4 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிர்ந்து அளிக்க இந்திய அரசியலமைப்பு சட்டம் 280வது ஷரத்தின் கீழ் மத்திய நிதிக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. உயரிய அதிகாரங்களை படைத்த நிதி கமிஷனை சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் 16வது நிதிக் கமிஷன் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழு இன்று 17ம் தேதி தமிழகம் வருகின்றது.
குழுவில் நிதிக் கமிஷன் உறுப்பினர்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியாகாண்டி கோஷ், செயலாளர் ரித்விக் பாண்டே, இணைச் செயலாசளர் ராகுல் ஜெயின் உட்பட 12 பேர் சிறப்பு விமானத்தில் இன்று பிற்பகல் தமிழகம் வர இருக்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு செல்லும் 16வது நிதிக்கமிஷன் குழுவினர், அங்கிருந்து நங்கநல்லுார் செல்கின்றனர். அங்கு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி. ரெங்கராஜனை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.
இரவு 7.30 மணிக்கு ஐடிசி கிராண்ட் சோழா திரும்பும் குழுவினர் அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு கலைநிகழ்ச்சிகளை கண்டு களிப்பதுடன், இரவு விருந்திலும் பங்கேற்கின்றனர். தொடர்ந்து நாளை (18ம் தேதி) காலை 9.30 மணிக்கு நிதிக் கமிஷன் குழுவினர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். அப்போது வரி பகிர்வின் அடிப்படையில் தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று நிதிக்குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். பின்னர் தொழில்துறை மற்றும் வர்த்தக பிரதிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். மறுநாள் 19ம் தேதி கடல்நீரை குடிநீராக்கும் நெமிலி பிளாண்ட்டை நேரில் பார்வையிடுவதோடு, ஸ்ரீபெரும்புதுார் சென்று ஏற்றுமதி தொடர்புடைய யூனிட்களையும் ஆய்வு செய்யவுள்ளனர். தொடர்ந்து சென்னை விமான நிலையம் செல்லும் அவர்கள் பிற்பகலில் சிறப்பு விமானத்தில் மதுரை சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் செல்கின்றனர். இரவு ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு , 20ம் தேதி காலையில் தனுஷ்கோடி செல்லும் குழுவினர், ராமநாதபுரம் நராட்சி அலுவலகத்தையும், கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தையும் பார்வையிடுகின்றனர். அதன்பின்னர் 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.