சென்னை பல்கலைக் கழகம் – ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் நாடகத்தினால் பட்டப்படிப்பு சான்றிதழ் செல்லுமா, செல்லாதா என்ற குழப்பத்தில் மாணவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக துணைவேந்தர் இல்லாமல், துணைவேந்தரின் கையொப்பம் இல்லாமல் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளதால் மேற்படிப்புக்கோ, வேலைக்கோ செல்லும்போது சான்றிதழ் சிக்கலை ஏற்படுத்துமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம் 166 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள், 3000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி மாணவர்கள் என 6000க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 6 வளாகங்களில், 280 க்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளில் சென்னை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களில் சுமார் 110 க்கு மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரியில் இணைவு பெற்று செயல்படுகின்றன.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேரா.கௌரி கடந்தாண்டு ஆகஸ்ட் 20ம் தேதி ஓய்வு பெற்றார். தொடர்ந்து புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானிய குழுவின் சார்பில் ஒருவரை இணைத்து அறிவித்தார் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி. இதனை நிராகரித்த தமிழ்நாடு அரசு ஏற்கனவே பின்பற்றி வரக்கூடிய விதிகள் மற்றும் மரபின் அடிப்படையில் பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தரப்பில் ஒரு பிரதிநிதி, அரசு தரப்பில் ஒரு பிரதிநிதி, ஆளுநர் தரப்பில் ஒரு பிரதிநிதி என மூன்று பேர் கொண்ட குழுக்கள் மட்டுமே அமைக்க முடியும் என அறிவித்தது. தொடர்ந்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.
துணைவேந்தர் பணியிடம் காலியாக இருப்பதால் கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியதால், பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் சுமார் 55 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற இயலவில்லை. இந்நிலையில் நாளை (செப்-24) சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பட்டமளிப்பு விழாவிற்கு துணைவேந்தர் அழைப்பு விடுக்கும் நிலையில், உயர்கல்வித்துறை செயலாளர் தரப்பிலிருந்து அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகின்றன.
வழக்கமாக பட்டப்படிப்பு சான்றிதழ்களில் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், மற்றும் துணைவேந்தரின் கையொப்பத்துடன் தான் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். தற்போது துணைவேந்தரின் கையொப்பம் இல்லாமல் ஆட்சி மன்ற குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள உயர்கல்வித்துறை செயலாளரின் கையொப்பத்துடன் வழங்கப்படும் இந்த சான்றிதழ்களால், வேலை வாய்ப்பிற்கோ அல்லது உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கோ செல்லக்கூடிய மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக வழங்கப்படும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் துணைவேந்தரின் கையொப்பம் இருக்கும். அதனையே முறைகேடாக பலரும் தயாரித்த தகவல்களை பல நீதிமன்ற வழக்குகள் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு இருக்கையில் துணைவேந்தரின் கையொப்பம் இல்லாமல் புதிதாக வழங்கக்கூடிய ஒரு சான்றிதழென்பது, அது உண்மையாக வழங்கப்பட்ட சான்றிதழ்தானா, இல்லையா என்ற குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் போலிகள் உருவாக காரணமாகும். இந்த சான்றிதழ்களை பெறும் மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக மற்ற மாநிலங்களுக்கோ அல்லது மேல்படிப்பிற்காக வெளிநாடுகளுக்கோ செல்லும் பொழுது அந்த சான்றிதழின் உண்மைத்தன்மையை அறிய பல்கலைக்கழகத்திடம் கேட்பார்கள். மற்றொரு நடவடிக்கையாக ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கக்கூடிய சான்றிதழ்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இதில் இருக்கக்கூடிய புதிய நடைமுறை குழப்பத்தை ஏற்படுத்தும், இதனால் பல மாணவர்களுக்கு உயர் கல்வி இடங்கள் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசரிடம் கேட்டபோது-
ஏற்கனவே இது போன்று பாரதியார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லாத காலகட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நியமிக்கப்படும் ஒருவர் கையொப்பமிட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் தலைவரான வேந்தரின் ஒப்புதலின்படி தான் சான்றிதழில் கையொப்பமிட்டு துணைவேந்தர் சான்றிதழ் வழங்குவார், ஆனால் துணைவேந்தர் இல்லாத பட்சத்தில் வேந்தரின் ஒப்புதலோடு ஒருவர் கையொப்பமிடும் பொழுது அதுவும் செல்லத்தக்க சான்றிதழாகவே இருக்கும் என தெரிவித்தார்.
சுமார் 166 ஆண்டுகளுக்கு முன்பாக(1850ம் ஆண்டு காலகட்டத்தில்) பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சட்டமாக உருவாக்கப்பட்டு பல்கலைக்கழகங்களாக நிறுவப்பட்டவை கொல்கத்தா, மும்பை, டெல்லி மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகங்கள். அதன்பின் கடந்த 1923ம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அதே சட்டத்தை ஏற்று, இந்திய பாராளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு சென்னை பல்கலைக்கழகம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பும், தனிச்சட்டமும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு உண்டு என்றும், வேந்தரின் அனுமதியோடு வழங்கப்படும் சான்றிதழ் செல்லத்தக்கவை என பல்கலைக்கழக சட்டத்தில் கூறப்பட்டாலும், நடைமுறையில் இவை சாத்தியம்தானா அல்லது சிக்கலை ஏற்படுத்துமா என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் இருப்பதால், அரசு இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.