தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் புறக்கணித்துள்ளார்.
நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் 9-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதனிடையே, பட்டமளிப்பு விழாவில் மீன்வள பல்கலைக்கழக இணைவேந்தரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதேபோல் பட்டமளிப்பு விழாவிற்கான அழைப்பிதழில் தமது பெயர் இடம்பெறாததால் நாகை மாவட்ட ஆட்சியரும் இந்த விழாவில் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நாகை மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி, நேற்று வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு துணில் மரியாதை செலுத்தினார். இதேபோல் வேளாங்கண்ணி பேரலாயத்திலும் தனது மனைவியுடன் வழிபாடு நடத்தினார்.