வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக விறுவிறுவென உயரும் ஆயத்த ஆடை ஏற்றுமதி. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் உயரும் என ஏற்றுமதியாளர் சங்க தலைவர் பேட்டி.
திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் ஏற்றுமதியானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காலத்தை தவிர்த்து மற்ற ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மூலம் பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணி ஈட்டி தரும் நகராக விளங்கியது.
இந்த நிலையில் கடந்த 2020 ல் கொரோனா தொற்றின் போது உலகமே போக்குவரத்து முடக்கப்பட்டு ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த அனைத்து வர்த்தகமும் நின்று போனது. இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் போர் சூழல் தணிந்த நிலையில் தற்போது ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று மற்றும் நூல் விலையும் மாதமாதம் குறைந்து வருவதால், வரக்கூடிய ஆர்டர்களை பங்களாதேஷ் வியட்நாம் உள்ளிட்ட போட்டி நாடுகளுடன் போட்டியிட்டு பெற முடிந்தாகவும், தற்போது அமெரிக்க ஆர்டர்கள் அதிக அளவில் கிடைத்து வருகிறது. குறிப்பாக கடந்த பின்னலாடை மட்டும் 25 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஜவுளி ஏற்றுமதி என்பது கடந்த ஆண்டு 45 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான அமெரிக்க ஏற்றுமதி என்பது 2.73 பில்லியனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க ஏற்றுமதியானது 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த உயர்வால் கடந்த 2021-22ம் ஆண்டை காட்டிலும் 2022-23ம் ஆண்டு திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.33,500 கோடியில் இருந்து ரூ.34,500 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குறிப்பாக வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு செல்ல வேண்டிய நாடுகளுடைய ஆர்டர்கள் இப்பொழுது இந்தியா பக்கம் திரும்பி உள்ளது.
இதில் குறிப்பாக அமெரிக்காவின் ஆர்டர்கள் அதிக அளவில் இந்தியாவில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. குறிப்பாக ஆடிட் என்ற ஆய்வுக் குழு மூலமாக IGS, SGS என்ற முகவர்கள் குழு மூலமாக திருப்பூர் பின்னலாடைகளில் ஏற்றுமதியில் சிறந்து விளங்கிவரும் நிறுவனங்களின் பட்டியல்களை அமெரிக்க இறக்குமதி நிறுவனங்கள் சேகரித்து வருகிறது. இதனால் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்க ஏற்றுமதி கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்காக தற்பொழுது முதலே திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றனர். என ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.