தேமுதிக தலைவர் விஜயகாந்த் 6வது நாளாக தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், தேவைப்படும்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே உடல்நலக்குறைவால் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். பொதுவெளியில் வருவதையும் தவிர்த்து வருகிறார். கம்பீரமான குரல், கட்டுமஸ்தான உடல் என இருந்த அவர் , தற்போது உடல் மெலிந்து காணப்படுவது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் விஜயகாந்த் கடந்த சனிக்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தேமுதிக தலைமை கழகம், கேப்டன் விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் அறிக்கை வெளியிட்டது. செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
அதேபோல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் அவரது உடல்நிலை சீராகவே இருப்பதாகவும், சீறுநீரகம் மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாலும், மார்பு சளியால் இடைவிடாது இருமல் இருந்து வந்ததன் காரணமாக தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்தார். இந்நிலையில்
தொடர்ந்து 6 வது நாளாக சிகிச்சை பெற்று வரும் கேப்டனுக்கு தேவைபடும் போது சேர்க்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது..