விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. 96 கோடி வாக்காளர்களில் 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார். தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 32,373 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் 29,930 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 9,661 வாக்குகளும் பெற்றுள்ளனர்.