விஜய்-ன் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய்-ன் ரசிகர்களே எனக்குத் தான் வாக்களிப்பார்கள். சீமான் தேனியில் பேட்டி.
தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று தேனி அருகே மதுராபுரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்காமல், வெறுமனே தீபாவளி வாழ்த்துக்கள் மட்டும் கூறுவது ஏற்புடையதல்ல. எங்களைப் பொறுத்தவரை பாஜக ஒரு தேவையில்லாத கட்சி.
நீட், ஜிஎஸ்டி, உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான். அதற்கடுத்ததாக ஆட்சிக்கு வந்த பாஜக மற்றும் பிரதமர் மோடி அந்த திட்டங்களை எல்லாம் வளர்த்து வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை என் இனத்தின் எதிரி காங்கிரஸ். பாஜக மானுட குலத்தின் எதிரி எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து நடிகர் விஜய்-ன் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது அவர்களது ரசிகர்களை சந்தித்து தான் அரசியலுக்கு வந்தனர். ஆனால் திரைத்துறையில் இருந்து வந்த நான் மக்களை சந்தித்து அரசியலுக்கு வந்தேன். பொதுவாக ஒரு நடிகரை பார்ப்பதற்காக கூட்டம் அதிகளவு வரும். ஆனால் கூட்டத்திற்கு வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் தான் என்றார். மேலும் விஜய்-ன் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. ஏனென்றால் விஜய்-ன் ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.
மேலும் கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கை விஜய்-ன் பெருந்தன்மை. அதனை ஏற்று அவரது கூட்டணியில் இணைவது அவரவது விருப்பம். எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் எனக் கூறினார்.