விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். இதில் வாக்குப்பதிவானது கடந்த 10-ந் தீவிர போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. காலை 7 மணி தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற்றது.
மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவானது அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 2,37,031 வாக்காளர்களில் 1,95,495 வாக்களித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் குறிப்பிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்படும் இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது இன்று தெரியவந்துவிடும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து முதல் சுற்றில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதன்படி, திமுக வேட்பாளர் 8,564, பாமக வேட்பாளர் – 3096, நாதக வேட்பாளர் – 438 வாக்குகளும் பெற்றுள்ளனர்.