விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.94% வாக்குகள் பதிவாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர். அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
இதில் தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 44 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் இருக்கிறார்கள். தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,355 பேர் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் 9 மணி நிலவரப்படி 12.94% வாக்குகள் பதிவாகியுள்ளன.