திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இந்து முன்னணி அமைப்பினரின் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் போலிசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
திருப்பூரில் நேற்றிரவு விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டிருந்தனர். ஊர்வலம் எம்.எஸ்.நகர் 60 ரோடு பகுதிக்கு வந்தபோது இந்து முன்னணி அமைப்பின் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. யாருடைய சிலை முன்னே செல்ல வேண்டும் என போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவருக்கும், இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த நவீன்குமார், வெங்கடேஷ், தேவா, ஸ்ரீதர், பாலாஜி ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லேசான தடியடி நடத்தி இரு தரப்பினரையும் கலைத்தனர். இந்த மோதல் சம்பவத்தில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.