வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென வவியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மாபெரும் பேரணி ஒன்றை மே 31 ஆம் தேதி நடத்துவதென கூட்டத்தில் தீர்மானம் நறைவேற்றப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான சென்னை அம்பேத்கர் திடலில் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் இன்று (ஏப்ரல் 22ஆம் நாள்) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:
1. ஆளுநரின் அதிகாரத்தை வரையறுத்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரவேற்கிறது. இதற்காக வழக்கு தொடுத்து இந்தத் தீர்ப்பைப் பெற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இக் கூட்டம் பாராட்டுகிறது.
2. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழ்நாடு ஆளுநராக உள்ள திரு ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாண்பமை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.
3. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ள ஆளுநர் திரு ஆர்.என்.ரவி மீதும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை அவமதிக்கும் விதமாகக் கருத்து தெரிவித்துள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
4. மத்திய மாநில உறவுகளை சீராய்வு செய்வதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் மாநில சுயாட்சிக் குழுவை அமைத்திருக்கிற தமிழ்நாடு அரசை இந்தக் கூட்டம் பாராட்டுகிறது.
5. அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும்வரை அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றும் நடவடிக்கையை நிறுத்தவேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது
6. புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளை நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் இருக்கும் தடையை விலக்குவதோடு அதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்திடத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
7. தமிழ்நாடு முழுவதிலும் பெருகிவரும் சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக் கூட்டம் வலியுறுத்துகிறது. விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் பட்டியல் சமூக மக்கள் வழிபடுவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. அவ்வாறு வழிபடச் சென்றபோது பட்டியல் சமூக மக்களை இழிவாகப் பேசி தாக்குவதற்கு முற்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
8. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த ஈகியரின் நினைவாக அவர்கள் அனைவரது உருவச் சிலைகளோடும் கூடிய நினைவு மண்டபம் ஒன்றை சென்னையில் அமைத்திடுமாறு தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் போலிஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் அடக்கம் செய்யப்பட்ட பரங்கிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்ப வேண்டும் என்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு சிதம்பரம் நகரை இணைக்கும் மேம்பாலத்துக்கு ராசேந்திரன் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் விசிக சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறோம். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது
9. திரு.ராகுல் காந்தி அவர்களின் வேண்டுகோளின் பேரில் கர்னாடகா தெலுங்கானா ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ரோஹித் வெமுலா சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கெல்லாம் முன்பாகவே, கல்வி நிலையங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளை அகற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்கிட நீதிபதி கே. சந்துரு அவர்கள் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு அமைத்தது. நீதிபதி கே.சந்துரு ஆணையமும் தனது அறிக்கையை அரசிடம் வழங்கி ஓராண்டு ஆகப் போகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் நீதிபதி கே. சந்துரு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் ரோஹித் வெமுலா சட்டத்தைத் தமிழ்நாடு அரசும் இயற்ற வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
10. இந்திய சனநாயகத்தை விரிவுபடுத்தும் நோக்கோடு உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு பட்டியல் சமூகத்தினருக்கென ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதற்காக மேலவளவு முருகேசன் உட்பட 7 பேர் சாதி வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். ஊராட்சி சனநாயகத்துக்காகப் பலியான முருகேசன் உள்ளிட்ட 7 பேரையும் சமூகநீதிப் போராளிகள் என அங்கீகரிக்க வேண்டுமென்றும், மேலவளவு கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து அதை ஒரு முன்மாதிரி கிராமமாக உருவாக்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்றும், முருகேசன் உள்ளிட்ட 7 போராளிகளையும் பெருமைப்படுத்தும் விதமாக மேலவளவில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
11. அமெரிக்க அரசு இந்தியப் பொருள்கள் மீது 26 % வரி விதித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உயர்கல்விப் பெற்றுவரும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து வருகிறது. முறையான அனுமதியின்றி நுழைந்தார்கள் எனக் குற்றம் சாட்டி இந்தியர்களைக் கைவிலங்கு , கால் விலங்கிட்டு அவமானப்படுத்தியது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு இதுவரை எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. அத்துடன் இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை குடியரசுத் தலைவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பை மோடி அரசு அளித்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் இறையாண்மையைப் பலியிடுவதாக உள்ளது. அமெரிக்காவின் அடிமையாக மாறிவிட்ட ஒன்றிய பாஜக அரசின் தேச விரோத அணுகுமுறையை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியாவின் நலனைப் பாதுகாக்க முன்வருமாறு ஒன்றிய அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
12. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென இக்கூட்டம் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. அந்த சட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை உச்சநீதிமன்றம் நீட்டிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
- வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் , மதச் சார்பின்மையைப் பாதுகாப்பதை வலியுறுத்தியும் விசிக சார்பில் மாபெரும் பேரணி ஒன்றை மே 31 ஆம் நாள் திருச்சியில் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது – சிவச்சந்திரன்