திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. இந்த அணை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. பெஞ்சல் புயலின்போது பெய்த கனமழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பியதால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தென் பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.68 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 7 மணி நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2500 கனஅடியாக இருந்த நிலையில், இது படிபடியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 8000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.45 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் கனஅடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. தற்போது, இது 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக உள்ள பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.