தமிழ்நாட்டிற்கு 2 ஆயிரம் கோடி அல்ல, ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கடலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அப்பா என்ற பெயரில் புதிய செயலியை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திமுக அரசுக்கு கல்வி, மருத்துவம் இருகண்கள். நடப்பு ஆண்டு மட்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு ரு.44 ஆயிரம் கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரு.200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் பள்ளிக்கல்வித் துறையால் கொண்டுவரப்படுகிற பல்வேறு திட்டங்கள் தான். இதை மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே அங்கீகரித்துள்ளது. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை தர மறுத்து நிறுத்தி வைத்துள்ளது. இது 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை. தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழநாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை என்பது சமூகநீதிக்கு, தமிழ்நாட்டிற்கு, தமிழுக்கு வேட்டுவைக்கிற கொள்கை. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரி அல்ல; எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் எப்போதும் எதிர்ப்போம்.
ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாம் கடைப்பிடிக்கும் சமூக நீதி கொள்கையை நீர்த்துப் போகச் செய்வது. பட்டியலின பழங்குடியின இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நாம் உதவித் தொகை வழங்கி வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு கொள்கை இதை மறுக்கிறது. 3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு எனப் பொதுத்தேர்வு வைத்துப் பிள்ளைகளை வடிகட்டப் பார்க்கிறார்கள். 9ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். இதனால் நம் பிள்ளைகள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர முடியாது. 10ஆம் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு வரை உள்ள மாணவர்கள், படிப்பைத் தொடர விரும்பவில்லை என்றால் அவர்களாகவே வெளியேறலாம் என்று சொல்கிறார்கள். இது படிக்காமல் போ என்று விரட்டுவதற்கு சமம் இல்லையா?. படித்து முன்னேற போகிறவர்களை மீண்டும் குலத்தொழிலை நோக்கிக் கொண்டு செல்ல பார்க்கிறார்கள். இதை எல்லாம் பார்த்துதான் தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கிறோம்.

இந்த திட்டத்திற்காக கையெழுத்து போட்டாதான் ரூ.2,000 கோடி கிடைக்கும். ரூ.10,000 கோடி கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்து போட மாட்டோம். ரூ.2,000 கோடிக்காக தேசிய கல்விக்கொள்கையில் கையெழுத்திட்டால் நம் தமிழ்ச்சமூகம் 2000 ஆண்டு பின்னோக்கி போய்விடுவோம். அநத பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்ய மாட்டான். நாம் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. இந்தி மொழியும் நமக்கு எதிரி இல்லை. அதை யாரு விரும்புகிறார்களோ, அவர்கள் இந்திய பிரச்சார சபாவிலோ, அல்லது கே.வி. பள்ளியிலோ அல்லது வேறு வகையில் படிப்பதை தமிழ்நாடு ஒருபோதும் தடுத்தது இல்லை. தடுக்கப்போவதும் இல்லை. இந்தியை எங்கள் மீது திணிக்க நினைக்காதீர்கள். அப்படி திணிக்க நினைத்தால் தமிழர் என்று ஒரு இனம் உண்டு, தனியே அவருக்கு ஒரு குணமுண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும்.
இரு மொழி கொள்கையால் தமிழ்நாட்டு மாணவர்களின் திறமை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை உலகம் முழுவதும் வாழுகிற தமிழர்கள் நிரூபித்திருக்கிறாரகள். மத்திய கல்வி அமைச்சர் கேட்கிறார். எல்லா மாநிலங்களும் மும்மொழி கொள்கையையும், தேசிய கல்வி கொள்கையையும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை அப்படினு கேட்கிறார். அவருக்கு நான் சொல்கிறேன். இது தமிழ்நாடு. உயர்தனி செம்மொழியான தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள். எங்க மொழியை அழிக்க எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஒரு கருத்தை நாளிதழ்களில் வெளியிட்டுள்ளார். ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத்தள்ளி, மொழியை அழிப்பதே சிறந்த வழி என கூறியுள்ளார். அவர் பழைய வரலாற்றை சொன்னாலும், அது தமிழ்நாட்டின் புதிய வரலாறாக, கொடிய வரலாறாக ஆகிடக்கூடாது என்பதற்காக தான் போராடுகிறோம். இன்று நேற்று அல்ல 85 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் போராடி கொண்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் ஏறத்தாழ 52 மொழிகள் அழிவின் விளிம்பிற்கு சென்றுவிட்டது. இந்தி பெல்ட் என்கிற மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25 மொழிகள் அழிந்துவிட்டது. தாய் மொழியை இழந்து இந்தி ஆதிக்கத்திற்குப் பலியான மாநிலங்கள், இப்போதுதான் மெல்ல மெல்ல விழிப்புணர்வு அடைந்து வருகிறது. அதற்கும் தமிழ்நாடு தன் தாய்மொழியான தமிழை தற்காத்துக்கொண்டதுதான் காரணம். தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை இன்று இந்தியாவின் ஒவ்வொரு மாநில மொழிகளையும் காக்கின்ற கொள்கையாக மாறியிருக்கிறது. இந்தி ஆதிக்கத்திற்குப் பலியான மாநிலங்கள், தற்போது விழிப்புணர்வு அடைய காரணம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டின் மொழிக்கொள்கை என்பது ஒவ்வொரு மாநில மொழிகளையும் காக்கின்ற கொள்கையாக மாறியிருக்கிறது. நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். தமிழ்நாடு பள்ளிக்கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காவிட்டாலும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் அவற்றை தொடர்ந்து செயல்படுத்துவோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.