சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மார்க்சிஸ்ட் கட்சியின் கடைமை என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி என்பவரும், பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் குமார் என்பவரும் கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநெல்வேலி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடினர்.
இந்நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் உதய தாட்சாயினி, தனது குடும்பத்தினர் தரப்பில் தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு கோரியும் சென்னை நீதிமன்றத்தில் காதலர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்த இருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. அந்த உத்தரவின் அடிப்படையில், காதல் தம்பதியினர் இன்று வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி தாங்கள் வசிக்கும் இடம் குறித்த விவரங்களையும், மிரட்டல் விடுக்கும் நபர்களின் விவரங்களையும் வழங்கினர். இந்த நிலையில், இருவருக்கும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது எங்களுடைய கடமை.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏதோ காதலர்களை தேடி போய் கட்டாய திருமணம் செய்வது வைப்பது போல் இந்து முன்னணி மற்றும் சில சாதிய அமைப்புகள் எங்களை அவதூறாக விமர்சனம் செய்கிறார்கள்..
இந்த தம்பதியை போல் முற்போக்காக காதல் திருமணம் செய்து கொண்டு எங்களை தேடி பாதுகாப்பு கேட்டு வருபவர்களுக்கு கட்டாயம் பாதுகாப்பு அளிப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இது போன்ற முற்போக்கு தம்பதிகளுக்கு பாதுகாப்பு கடமையை தொடர்ந்து செய்யும் என்றார்.
காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு வாழ்வாதாரம் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மீண்டும் அரசை வலியுறுத்துகிறோம் என்று மேலும் தெரிவித்தார்.