Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசமைப்பு சட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் - இந்துமகா சபா என்ன பங்களிப்பு செய்தன?... திமுக எம்.பி. ஆ.ராசா...

அரசமைப்பு சட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் – இந்துமகா சபா என்ன பங்களிப்பு செய்தன?… திமுக எம்.பி. ஆ.ராசா சரமாரி கேள்வி!

-

- Advertisement -

இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் – இந்து மகா சபா அமைப்புகள் என்ன பங்கு வகித்தனர் என திமுக எம்.பி., ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு குறித்த விவாதத்தில் திமுக எம்.பி. ஆ. ராசா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் டாக்டர் ராதாகிருஷ்ணன், சர்தார் வல்லபாய் படேல், நேரு, சரோஜினி நாயுடு உள்ளிட்ட பலர் முக்கிய பங்களித்தனர். ஆனால், உங்களின் பாஜக முன்னோடிகளான ஆர்.எஸ்.எஸ். இந்து மகா சபாவை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் என்ன பங்கு வகித்தார்கள்?

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் அரசியலமைப்பு சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள். ஆனால் அரசியல் சாசன பதவியின் 2-ம் இடத்தில் இருப்பவர் முன்பு ஒரு மாநாட்டில் அரசியலமைப்பு சாசனத்தின் அடித்தளத்தை மாற்ற விரும்புகிறோம் என்று கூறினார். உங்கள் கட்சியில் துணைத் தலைவர் ஒருவர் மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாங்கள் 400 இடங்களை வென்றால் இந்த நாட்டை இந்து ராஷ்டிரமாக மாற்றுவோம் என்று தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டம் தொடர்பான ஒரு வழக்கை 1973 ஆம் ஆண்டு 13 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. அதன் தீர்ப்பு 1500 பக்கங்களில் உள்ளது. அந்த தீர்ப்பை நான் பலமுறை சட்ட மாணவராக இருந்தபோது படித்திருக்கிறேன். அரசியலமைப்பு சட்டத்தில் நீங்கள் பல திருத்தங்கள் செய்யலாம். ஆனால் அதன் அடித்தளத்தை நீங்கள் மாற்றக்கூடாது.  அரசியலமைப்பில் 6 முக்கிய கூறுகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். 1. ஜனநாயகம் 2. மதச்சார்பின்மை 3. நாட்டின் சட்டம் 4. சமத்துவம் 5. கூட்டாட்சி 6. பாரபட்சமில்லாத நீதித்துறை. இந்த 6 கூறுகளும் பாஜகவின் ஆட்சியில் ஆபத்தில் உள்ளது. அதற்கு எதிராகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

24 வயதுடைய இளைஞர் ஒருவர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரது தந்தையை சிறைக்கு அவரை காணவந்தபோது, அவர் வழக்கத்திற்கு மாறாக முழு கை சட்டை அணிந்திருந்தார். இதனை புரிந்துகொண்ட அந்த இளைஞரின் தந்தை அவரிடம் சிறையில் தாக்குதல் நடத்தினரா? என கேள்வி எழுப்பினார். ஆனால் 24 வயது இளைஞர் சொல்கிறார் எனது காயங்கள் குறித்து வருத்தம் அடையாதீர்கள், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனை நாட்டிற்கு தெரிவியுங்கள் என்றார். அந்த இளைஞர் தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். தந்தை கலைஞர் மு.கருணாநிதி.  திமுகவுக்கு வலி தெரியும், எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். நாங்கள் காயப்பட்டிருக்கிறோம், திமுக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு அரசியலமைப்புச் சட்டமும், தேசப்பற்றும், தேசமும் எல்லாவற்றையும் விட மேலானது என நம்புகிறோம். அதனால் தான் நாங்கள் காங்கிரஸ் உடன் இருக்கிறோம். திமுக எந்த கூட்டணியில் இருக்கிறது என்பது முக்கியம் அல்ல. ஆனால் எதற்காக இங்கே நிற்கிறது என்பது தான் முக்கியம்.

மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிசா காலகட்டத்தில் ஜனநாயகம் மட்டும் தான் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால் பாஜகவின் ஆட்சியில் அரசமைப்பு சட்டத்தின் ஜனநாயகம் உள்ளிட்ட 6 முக்கிய  கூறுகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அதனால் தான் நாங்கள் இங்கே நின்று கொண்டிருக்கிறோம். அவசர நிலையின்போது மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகியவை அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. அது தான் உங்களின் கைகளிலிருந்து இந்த நாட்டை காப்பாற்றி கொண்டிருக்கிறது. 85 வயது முதியவரான ஸ்டேன் ஸ்வாமி, தனது வாழ்க்கையை பழங்குடியினருக்காக அற்பணித்தவர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு பிணை கிடைக்காததால் சிறையிலேயே உயிரிழந்தார். மத்திய அரசுக்கு எதிராக போராடியதால் நாட்டில் ஏராளமான அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர் சங்க தலைவர்கள் அனைத்து தரப்பினரும் சிறையில் தள்ளியுள்ளனர். இதற்கான விலையை ஓருநாள் பாஜக கொடுத்தே தீரும்.

இந்தியாவை இரு நாடுகளாக கூறு போட்டது ஜின்னா அல்ல; வீர சாவர்க்கர்தான். 1924-ம் ஆண்டே வீர சாவர்க்கர்தான் இரு நாடுகள் குறித்து பேசியும் எழுதியும் இருக்கிறார். இந்து நாடாக அறிவிக்கப்பட்டால் எத்தகைய விலை கொடுத்தும் அதனை தடுப்போம் என அம்பேத்கர் கூறினார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மற்ற மூத்த நிதிபதிகளை புறந்தள்ளிவிட்டு மேலே வந்ததாக கூறினார். ஆனால் பாஜக ஆட்சியில் ஒரு நீதிபதி 23 மூத்த நிதிபதிகளை கடந்து உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தமிழ்நாட்டில் ஒரு தலித் நீதிபதி உச்சநீதிமன்றத்திற்கு செல்லலாம் என முயற்சித்தால், அவரை கேளராவுக்கு மாற்றி அவரது பணிக்காலத்தை நிறைவு செய்ய வைக்கிறீர்கள்.

பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்து கொண்டது. இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்து கொண்டது. ஆனால் இப்போது இப்படிப்பட்ட தீய சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள் என்று அம்பேத்கர் நினைக்கவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே,  பாஜகவை தீய சக்தி என்று ஆ.ராசா குறிப்பிட்டதற்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆ ராசா குறிப்பிட்ட அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுமென அவைத்தலைவர் தெரிவித்தார்.

 

MUST READ