தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? விரைவில் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த தலைமைச்செயலர் யார் என்பது குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 6 தலைமைச்செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் பொறுப்பேற்றார். 1988ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், வயது மூப்பு காரணமாக வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் மூன்று பேர் பெயர்கள் பட்டியலில் உள்ளது. அதாவது தற்போதைய தமிழ்நாடு அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள 1986ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவராக உள்ளார்.
அடுத்தது 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த்துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார். மூன்றாவது இதே 1989ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.
இதில் ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர். எஸ்.கே.பிரபாகர் வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெறுகிறார். இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனாவே தமிழ்நாடு அரசின் அடுத்த தலைமைச்செயலராக நியமிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெற்றவுடன், மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷகில் அக்தர் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக தலைமைச் செயலர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்பதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.