கடந்த ஆண்டு இயற்கை பேரிடர்களுக்காக ரூ.2,028 கோடி நமது சொந்த நிதியிலிருந்து செலவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கடலில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவியதன் வெள்ளி விழா ஆண்டைஒட்டி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்க ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு துவங்கி வைக்க உள்ளார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்ததால் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி 3 நாட்களில் இருந்து, 2 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் 3-வது நாள் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 வழங்காதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த ஆண்டு மட்டும் மிகப்பெரிய இயற்கை பேரிடரை தமிழகம் சந்தித்துள்ளதாகவும், ரூ.2,028 கோடி பேரிடர்களுக்காக நமது சொந்த நிதியிலிருந்து செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மத்திய அரசிடம் பேரிடர் நிதிக்காக சுமார் ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே தந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், கேட்டது மிக அதிகம் கிடைத்தது மிக சொற்பமான தொகை. ஆக இதுபோன்ற சூழ்நிலையில் நிதி சுமையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என விளக்கம் அளித்தார்.
பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, வரும் காலத்தில் நல்லசூழ்நிலை உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 பெற்று வரும் மகளிருக்கு பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு முன்கூட்டியே இந்த தொகையை வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என பிரதமர் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அவர், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழ் மொழியில் இலக்கியங்கள் இருந்திருக்கிறது என்பதற்கு சான்று உள்ளதாகவும் தெரிவித்தார்.