தொகுதி 4 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்துத்துறை உதவியாளர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்காதது ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தனது வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்காக போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி 4 (குரூப் 4) பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
வேலைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில், இன்று வரை நியமன ஆணைகளை வழங்காமல் தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு சுமார் 9600 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அக்டோபர் 28-ஆம் நாள் வெளியிடப்பட்டன.
எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அனைத்து சான்றிதழ்களையும் தாக்கல் செய்தவர்களுக்கு துறைகள் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
அதனால், தங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது பறிக்கப்படுமா? என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். கடுமையான மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு விட்டநிலையில், போக்குவரத்துறைக்கு தொகுதி 4 பணியாளர்களை நியமிப்பதில் மட்டும் அரசு காலம் தாழ்த்துவது ஏன்? ஒருவேளை அவர்கள் நியமிக்கப்படுவதற்கு இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகும் என்றால், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்படி தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்? அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு.
அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சிதைப்பதாக இருக்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போக்குவரத்துத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என கூறியுள்ளாா்.
நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் – முதல்வர் தலைமை