நீலகிரி மாவட்டம் அருகேயுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை ஆக்ரோஷத்துடன் விரட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. அண்மையில் பெய்த கனமழை காரணமாக வனப்பகுதியில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் வன விலங்குகளை காண்பதற்காக, வனத்துறை வாகனம் மூலம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது வனப் பகுதியில் உள்ள நீர்நிலை அருகே குட்டியுடன் 2 பெண் யானைகள் உலா வந்தன. அதனை சுற்றுலா பயணிகள் செல்போன் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, தாய் யானை ஒன்று திடீரென ஆக்ரோஷத்துடன் சுற்றுலா பயணிகள் சென்ற வனத்துறை வாகனத்தை துரத்தியது. இதனை கவனித்த வேன் ஒட்டுநர் வாகனத்தை விரைந்து இயக்கினார். சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு துரத்திவந்த அந்த காட்டுயானை பின்னர் வனத்திற்குள் சென்றது. இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.