அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள்- தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்
சேலத்தில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி சுகாதாரமற்ற கழிவறை மற்றும் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்த விவகாரத்தில் புகார் தெரிவித்த மாணவிகளை தண்டித்த பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர், கோட்டைப் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் குப்பை கூலங்கள் நிறைந்து புழுக்கள் இருப்பதாகவும், கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாகவும் மாணவிகள் தலைமை ஆசிரியை தமிழ்வாணியிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் தெரிவித்த மாணவிகளை , தனது அறையில் முட்டிப்போட வைத்து தலைமை ஆசிரியை மிரட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமை ஆசிரியையின் நடவடிக்கையை கண்டித்து நேற்று காலை 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குறைகளை கேட்டறிந்தனர் . அப்போது மாணவிகள், தலைமை ஆசிரியை தமிழ்வாணி மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.