அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். ஜூலை 5ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2 சுற்றுக் கலந்தாய்வு முடிவில் 63 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. .
தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த மே 5ம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1,07,395 இடங்கள் உள்ளன. மாத இறுதி வரை மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அவகாசம் முடிந்து, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மாணவர் சேர்க்கைப் பணிகளும் துரித கதியில் நடைபெற்றது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில இதற்கு முன் விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 5-ம் தேதி வரை TNGASA என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.