நடிகர் விஜய்யின் மாநாட்டுக்கு சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று ( அக்.27) நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மிகவும் கவனத்துடன் மேற்கொண்டு வந்த விஜய், அவ்வப்போது தொண்டர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வந்தார். வயதானவர்கள், கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் மாநாட்டிற்கு வர வேண்டாம் என்றும் , மது அருந்திவிட்டு வரக்கூடாது, மாநாட்டிற்கு வரும் பேருந்துகளை வழியில் எங்கும் நிறுத்தக்கூடாது, பாதுகாப்பாக வரவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
குறிப்பாக நேற்றைய தினம் கூட, இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று என்றும், உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன் என்றும் தொண்டர்கள் மற்றும் கட்சியினரை வலியுறுத்தியிருந்தார். மேலும், “எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே, மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும்.” என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சென்னை பெரியமேடு பகுதியில் இருந்து விஜய் மாநாட்டிற்கு 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் தவெக கட்சிக் கொடியுடன் சென்றுள்ளனர். டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிறுத்தம் அருகே உள்ள சந்திப்பில் சென்றுகொண்டிருந்தபோது மணல் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை வழியாக தேனாம்பேட்டை வந்து, வலது புறமாக திரும்பிய மணல் லாரி மீது வாலிபர்கள் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.