Terrorism down 77 percent in 5 years: Home Ministryகடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தீவிரவாத சம்பவங்கள் 77 சதவீதம் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் தீவிரவாத சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் அதன் சாதனைகள் குறித்து உள்துறை அமைச்சகம் குழுவிடம் தெரிவித்தது. இதில் இடதுசாரி தீவிரவாதம், தீவிரவாத எதிர்ப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, சைபர் குற்றம், எல்லை மேலாண்மை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவை அடங்கும்.
உள்துறை அமைச்சகம் தரப்பில், ‘‘2023 ஆம் ஆண்டில் நடவடிக்கைகளின் போது 30 பாதுகாப்புப் பணியாளர்கள் உயிர் தியாகம் செய்தனர், அதே நேரத்தில் 2018 ல் இந்த எண்ணிக்கை 91 ஆக இருந்தது. இப்போது 67% குறைந்துள்ளது. 2018ல் 417 பயங்கரவாதிகள் நடத்திய சம்பவங்கள், 2023ல் 94 ஆக குறைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா அரசு அமைந்ததில் இருந்து பயங்கரவாதச் சம்பவங்கள், என்கவுண்டர்கள் அதிகரித்தாலும், அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவு 2023 வரை மட்டுமே.
2023 ஆம் ஆண்டில் கல் வீச்சு, வேலைநிறுத்தம் போன்ற ஒரு சம்பவம் கூட நடைபெறவில்லை என்றும், இது 2018 ஆம் ஆண்டை விட 100% குறைவு என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018 ல் 55 ஆக இருந்த குடிமக்கள் உயிரிழப்புகள் 2023 ல் 14 ஆகக் குறைந்துள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, அனைத்து மத்திய சட்டங்களும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு பொருந்தும்.
2023 ஆம் ஆண்டில் 2.11 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர். 2019 -ல் லடாக் ஒரு தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டாலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களின் வெற்றியை அமைச்சகம் எடுத்துக்காட்டுகிறது. இவற்றில் லைன் ஆஃப் ஆக்ச்சுவல் கன்ட்ரோலுக்கு (எல்ஏசி) அருகில் உள்ள துடிப்பான கிராமத் திட்டமும் அடங்கும். வடக்கு எல்லைகளைத் தவிர, மற்ற எல்லைகளிலும் துடிப்பான கிராமங்களை உருவாக்க முன்மொழிவு இருப்பதாகக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், UAPA சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதில் இருந்து 57 நபர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் தாவூத் இப்ராகிம், ஜெய்ஷ் இ-இம்மத் தலைவர் மௌலானா மசூத் அன்சாரி, லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத், காலிஸ்தான் ஆதரவாளர் அர்ஷ்தீப் சிங், கோல்டி பிரார், லக்பீர் சிங் மற்றும் வாத்வா சிங் ஆகியோர் அடங்குவர். மொத்தம் 22 அமைப்புகள் ‘சட்டவிரோத சங்கங்கள்’ என்றும், 45 அமைப்புகள் ‘பயங்கரவாத அமைப்புகள்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.