திருவள்ளூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசிய செம்பு நகை அடகு வைத்து 4.33 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாா்கள்.
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் செயல்படும் (முத்தூட் பின்கார்ப்) தனியார் நிதி நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 19 ஆம் தேதி அந்த நிதி நிறுவனத்திற்கு வந்த ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய விஜயகுமார் மற்றும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஜான் இருவரும் சேர்ந்து தாலி சரடு ஒன்று மூன்று வளையல்கள் ஆகியவைகளை அடகு வைக்க வந்துள்ளனர். அப்போது பணியில் நகை அளவீடு செய்து மதிப்பிடும் அதிகாரி அத்தகைய நகைகளை சோதித்தும், ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஏற்கெனவே ராணிப்பேட்டை பகுதியில் உள்ள அதே கிளையில் கணக்கு வைத்திருந்ததாலும் ஜான் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் காப்பீடு அலுவலராக பணியாற்றி வந்ததால், அடகு வைக்க அனுமதி அளித்துள்ளனர்.
பின்னர், அவா் கொண்டு வந்த நகைகள் 82.1 கிராம் இருந்ததால் அதற்கான தொகையான 4 லட்சத்து 33 ஆயிரம் தொகையை விஜயகுமார் வங்கி கணக்கு அன்றைய தினமே அனுப்பி வைத்துள்ளனர். நகை வைத்த 8 நாட்களுக்கு பிறகு அதே மாதம் 27 ஆம் தேதி சென்னையில் உள்ள அந்த தலைமை நிதி நிறுவனத்திலிருந்து இருந்து வழக்கமாக மாத ஆடிட்டிங் செய்ய வந்த அதிகாரிகள் நகைகளை மதிப்பீடு செய்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது விஜயகுமார் வைத்த நகைக்கும், மற்ற நகைகளுக்கும் வித்தியாசம் ஏற்பட்டிருப்பதை முதலில் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, விஜயகுமார் வைத்த நகையை முழுமையாக சோதித்து தட்டிப் பார்த்தபோது வித்தியாசமான ஓசை வருவதை கண்டுள்ளனர். அதிகாரிகள் நகைக்கு இடையே சிறியதாக துளையிட்டு ஆசிட் ஊற்றிப் பார்த்தபோது அவை போலியான நகை என தெரியவந்துள்ளது. அந்த நகைகளை செம்பிலான செயின் மற்றும் வளையல்கள் என்பது தெரியவந்தது. அத்தகைய நகைகள் மீது எட்டு கோடு தங்க முலாம் பூசப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். பின்னர் இது தொடர்பாக அந்த நிதி நிறுவன நகை வைப்பக அலுவலர் சங்கரி திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அவா் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனியார் வங்கியில் காப்பீட்டு பிரிவில் ஜான் என்பவர் தனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து நகையை வைக்குமாறு கூறியதால் நகையை வைத்து பணத்தை அவரிடம் அளித்ததாகவும் தொிவித்துள்ளாா். காவல்துறையினாின் தொடர் விசாரணையில் தனியார் வங்கி ஊழியர் ஜான் வெங்கடேசன் என்பவரிடம் அத்தகைய நகைகளை கொடுத்து, தங்க முலாம் பூசி விஜயகுமாா் அடகு வைத்து பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து விஜயகுமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளுர் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் மூளையாக செயல்பட்டு தலைமறைவாக உள்ள தனியார் வங்கி ஊழியர் ஜான் மற்றும் வெங்கடேசன் இருவரையும் காவல் துறையினா் தேடி வருகின்றனர். தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசிய செம்பு நகை அடகு வைத்து 4.33 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தில் இருந்த படி திருட்டை கண்டுபிடித்த வீட்டின் உாிமையாளா்! திருடா்கள் கைது…