நேற்று நள்ளிரவு சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை செருப்பால் அடித்த பெண் உள்ளிட்ட மூன்று பேர் கைது…..
சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணவேலன் அவர்களை செருப்பால் அடித்த பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தீபாவளி பண்டிகை முடித்து சொந்த ஊரிலிருந்து அவரவர் பணியிடங்களுக்கு வாகனங்களில் திரும்பியதால் நேற்று இரவு சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனை பள்ளப்பட்டி போலீசார் உட்பட மாநகர போலீசார் சரி செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இரவு 10 மணி அளவில் சூரமங்கலம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்கு (43), அவரின் உறவினர் கமலேஸ்வரி (35), ஹரிகிருஷ்ணன்(28) ஆகியோர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் நுழைவு பாதை வழியாக காரினை பஸ் ஸ்டாண்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர். அங்கு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலன் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காரை பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ளே விடாமல் தடுத்துள்ளனர். இதனால் போலீஸாருக்கும் காரில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கமலேஸ்வரி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி எஸ்.எஸ்.ஐ சரவணவேலனை அடித்துள்ளார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு ‘அமரன்’ படத்தை போட்டுக்காட்ட முதல்வரிடம் கோரிக்கை வைத்த வானதி சீனிவாசன்!
அதனை தடுக்க சென்ற போலீசாருக்கும் அடி விழுந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கமலேஸ்வரி சாலையில் உருண்டு பிரண்டு ரகளை செய்தார். இதையடுத்து காரில் வந்த மூன்று பேரையும் போலீசார் குண்டு கட்டாக போலீஸ் ஸ்டேசனுக்கு தூக்கி சென்று கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலன் அளித்த புகாரின் பேரில் , பெண் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர். காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது , போலீசாரை தாக்கியது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். காரில் வந்தவர்கள் அவர்களுடைய காரில் தமிழக வெற்றிக் கழக கொடியை கட்டி இருந்தனர். ஆனால் கட்சியில் இவர்கள் யாரும் நிர்வாகியாக இல்லை