திரைத்துறையை உதயநிதி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காரணம், திரையுலகில் ஸ்டார் ஆக வேண்டும் என்ற அவரது நிறைவேறாத ஆசையே என யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்த குடும்பத்தின் சினிமா மோகம் உலகறிந்தது. தன்னால் ஸ்டார் ஆக முடியவில்லை என்பதால்தான் தன் மகனை ஸ்டார் ஆக்க முயற்சி செய்தார் ஸ்டாலின்.
உதயநிதியும் ஸ்டார் ஆக முடியவில்லை. திரைத்துறையில் தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல்தான், குறைந்தது திரைத்துறையை கட்டுக்குள் வைத்து பெரிய ஸ்டார்களோடு பழகுவதன் மூலம், தனது தோல்வியை சமன்செய்யலாம் என்ற ஆழ்மன உந்துதல் காரணமாக இன்று வரை திரைத்துறையை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் உதயநிதி.
ரெட்ஜெயண்ட் மற்றும் அதன் பினாமி நிறுவனங்களில் இருந்து வரும் வருமானத்தில்தான், உதயநிதி வீட்டில் உலை கொதிக்கும் என்ற நிலை இல்லை. ஆனாலும், திரைத்துறையினரின் வயிற்றெரிச்சலையும் மீறி அல்லது புறந்தள்ளி, திரைத்துறையை உதயநிதி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காரணம், திரையுலகில் ஸ்டார் ஆக வேண்டும் என்ற அவரது நிறைவேறாத ஆசையே. இந்த ஏக்கம் அவர்கள் ஜீன்களிலேயே இருக்கிறது. திரைத்துறையினர் யார் முதல்வரை பார்க்க வந்தாலும், அப்புகைப்படத்தில் உதயநிதி இருப்பதை பார்த்திருப்பீர்கள்.
அடுத்து, இன்பநிதியையும் ஹீரோ ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திரையில் ஹீரோ ஆவது, திமுகவுக்கு தலைமை ஏற்பதன் முதல் படி என்று அக்குடும்பம் நம்புகிறது.

இவற்றின் வெளிப்பாடே, அமரன் திரைப்படத்தை பார்த்து விட்டு அந்த புகைப்படத்தை வெளியிடுவது. ரகசியமாக யாருக்கும் தெரியாமல் இத்திரைப்படத்தை பார்த்திருக்க முடியும். ஆனால், புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்வது, உதயநிதியின் நிறைவேறாத வேட்கையின் நீட்சியே. உதயநிதிக்கு திரைத்துறையில் இருக்கும் மகிழ்வும், நிறைவும் துணை முதல்வர் பணியிலோ, இளைஞர் அணிச் செயலாளர் பணியிலோ இல்லை என்பதை கண்கூடாக பார்க்க முடியும்.
மொத்த குடும்பமுமே, ஒரு சராசரி சினிமா ரசிகர் மனநிலை கொண்டவர்கள். ஆளுமை அற்றவர்கள். அதனால்தான் இவ்வளவு அவப்பெயரை சந்திக்கிறார்கள்’’ என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். .