இந்தியைத் திணிப்பதால் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் உருவாக்கி உள்ளது என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா குழுமத்தின் சார்பில் ”கலை மற்றும் இலக்கிய திருவிழா – 2024” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநி ஸ்டாலின் பங்கேற்று, “திராவிட இயக்க அரசியலில் இலக்கியம் மற்றும் மொழியியலின் தாக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர், இந்தித் திணிப்பு எதிர்ப்பை ஒரு காலத்தில் பிரிவினை வாதம் என்றார்கள். இப்போது இந்தியைத் திணிப்பதால்தான் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள்” என்று கூறினார்.
“தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்கும் இடையிலான கலாச்சார, அரசியல் மற்றும் மொழி உறவு தொடர்பான வரலாறு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. இலக்கியம், மொழி மற்றும் அரசியல் ஆகியவற்றில் இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் பிறந்த தந்தை பெரியார் அவர்கள் 1924-இல், கேரளாவில் வைக்கம் போராட்டத்தை முன் நின்று நடத்தி வெற்றி பெற்றார்கள். அதே போல, கேரளத்தில் பிறந்த டி.எம்.நாயர் அவர்கள், தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தொடக்கப்புள்ளியாக இருந்த, தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை ஆரம்பித்தார்கள். அது, தமிழ்நாட்டில் புதிய அரசியல் எழுச்சியை அக்காலத்தில் ஏற்படுத்தியது.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசும், கேரள அரசும் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளன. இந்தியாவிலேயே இந்த இரண்டு மாநிலங்கள்தான் மிகவும் முற்போக்கான மாநிலங்கள் திகழ்கின்றன. இரண்டு மாநிலங்களுமே பாசிசத்தையும், மதவாத சக்திகளையும் தூர விலக்கி வைத்துள்ளன.
பாசிசத்துக்கு எதிராக இந்த இரண்டு மாநில மக்களும் ஏன் கடுமையாக எதிர்த்து நிற்கின்றனர் என்று சிந்தித்தால், இங்கு முற்போக்கு அரசியல் வலுவாக இருக்கிறது.” என்று கூறினார்.
திராவிட இயக்கத்தின் முன்னோடியான சுயமரியாதை இயக்கம், எவையெல்லாம் கலாச்சாரத்தையும் மொழியையும் மேலாதிக்கம் செய்கின்றனவோ அவற்றை எல்லாம் எதிர்த்து நின்றது. திராவிட இயக்கம் தனது அடையாளத்தின் மையமாக தமிழை வைத்துள்ளது. தமிழ், வெறும் தொடர்பு கொள்வதற்கான மொழியாக மட்டுமல்லாமல் இந்தித் திணிப்பை எதிர்க்கவும், அழுத்தப்பட்ட சமூகங்களின் அங்கீகாரத்துக்காகவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.
1930 மற்றும் 1960-களில் இந்தியை அலுவல் மொழியாக்க முயற்சிகள் நடைபெற்றபோது அதற்கு எதிராக திராவிட இயக்கம் வெகுண்டெழுந்தது. தமிழ்ப் பண்பாடு மற்றும் மொழி அடையாளத்துக்கு இந்தித் திணிப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அது கருதியது.
தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்பை ‘பிரிவினைவாதம்’ என்று அப்போதைய தேசியவாதிகள் அடையாளப்படுத்தினர். எங்களின் போராட்டம் நாட்டில் ஒற்றுமையின்மையை உண்டாக்கிவிடக் கூடும் என்று குற்றஞ்சாட்டினர். எனினும், இப்போது பல பத்தாண்டுகளுக்கு பிறகு வரலாறு உண்மையை உணர்த்தி உள்ளது. இன்று, தேசியவாதிகள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் போலி தேசியவாதிகள், இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிப்பதால் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் உருவாக்கி உள்ளதை மக்கள் அனைவரும் தெரிந்து கொண்டுள்ளார்கள்.
எனவே பல மாநிலங்கள் தங்களது மொழிகளை இந்தித் திணிப்புக்கு காவு கொடுக்காமல் காப்பாற்றியது திராவிட இயக்கம் தான் என்ற பெருமிதத்துடன் நான் உங்கள் முன் நிற்கிறேன். இன்றைக்கு இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கின்றன என்று சொன்னால், அதற்கு மிகப்பெரிய காரணம் நாங்கள் சார்ந்திருக்கக் கூடிய திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
திராவிட இயக்கம் இந்தித் திணிப்பை எதிர்த்ததே தவிர, தனிப்பட்ட முறையில் இந்தி என்கிற மொழி மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. இந்திய ஒன்றியத்தின் விடுதலைக்கு முன், தமிழ்நாட்டில் இருந்த நிலை குறித்து உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அன்று சமஸ்கிருதம் பேசுபவர்கள் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டார்கள். சமஸ்கிருதம் சமத்துவத்தை மறுத்தது. ஒடுக்கப்பட்டவர்களின், பெண்களின், உழைப்பாளிகளின் மாண்பையும் முன்னேற்றத்தையும் தடுத்தது.
யாரேனும் மருத்துவம் படிக்க வேண்டும் என்று சொன்னால் அவர்கள் சமஸ்கிருதத்தில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். எப்படி இன்று நீட் தேர்வு கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, விளிம்பு நிலை மாணவர்களை மருத்துவம் கற்பதில் இருந்து தடுக்கின்றதோ, அப்படி அன்று மாணவர்கள் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தடையாக இருந்தது. அந்தத் தடையை நீக்கியது நீதிக்கட்சி தான்.
1920-களில் சமஸ்கிருத பேராசிரியர் ஒருவரின் மாதச் சம்பளம் சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.200 ஆக இருந்தது. ஆனால் தமிழ்ப் பேராசிரியரின் சம்பளம் ரூ.70 தான் வழங்கப்பட்டது. சமஸ்கிருதம் மூலம் எந்தச் சமூகம் அதிகமாகப் பயனடைந்திருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
திராவிட இயக்கத்தின் முக்கியமான விஷயங்களில் ஒன்று, ‘தனித்தமிழ் இயக்கம்’. அதன் மூலம் தமிழில் கலந்திருந்த சமஸ்கிருத ஆதிக்கம் வெளியேற்றப்பட்டது. சமஸ்கிருத வேர் கொண்ட சொற்கள் கவனமாக நீக்கப்பட்டு, புதிய சொற்களை திராவிடத் தலைவர்களும் அறிவியக்க ஆளுமைகளும் வளர்த்தெடுத்தனர். இதனால் தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சுதந்திரம் காப்பாற்றப்பட்டது.
தமிழர்களின் சடங்குகள், பண்பாடு ஆகியவற்றில் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்தை தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். அதே காலகட்டத்தில் 1937-இல் சி.ராஜகோபாலாச்சாரி அரசு பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இந்தியைக் கொண்டு வருவதன் மூலம் அப்படியே சமஸ்கிருதத்தையும் கொண்டு வந்து விடுவார்கள் என்பதை பெரியார் கண்டுகொண்டார். அதனால் பள்ளிகளில் இந்தியைத் திணிப்பதற்கு எதிராக போராட்டத்தை பெரியார் முன்னெடுத்தார். அந்தப் போராட்டம் 1937 முதல் 1940 வரை நடந்தது. இந்தித் திணிப்பை முடக்கிய இந்த வெற்றிகரமான போராட்டம் ‘முதல் தமிழ் மொழிப் போர்’ என்று போற்றப்படுகிறது.
தமிழ்நாட்டிலே இந்தித் திணிப்புக்கு எதிராக நூற்றுக்கும் அதிகமானவர்கள் தங்களுடைய இன்னுயிரை நீத்தார்கள். அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தி.மு.கழகம் சார்பில், ஜனவரி 26-ஆம் தேதியன்று மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மொழிப்போர் தியாகிகள் நினைவாக மணி மண்டபங்களை கழக அரசு கட்டி உள்ளது.
அதே போல, மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தாருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய சாலைகள், மேம்பாலங்களுக்கு, மொழிப்போர் தியாகிகளின் பெயரை கலைஞர் அவர்கள் சூட்டினார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராக 1937 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தொடங்கிய இந்தப் போராட்டம் இந்த நாள் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் கூட, தூர்தர்ஷனின் தமிழ்நாட்டுப் பிரிவான ‘டிடி தமிழ்’, ‘இந்தி மாதக் கொண்டாட்டத்தை’ நடத்தியது. அதில் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டார். அதை எதிர்த்து எங்கள் கட்சியின் மாணவர் அணி அந்தத் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியது.
ஆளுநர் அவர்கள் தொடர்ந்து திராவிட சித்தாந்த வரலாற்றை இருட்டடிப்பு செய்து வருவதை எங்கள் திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வன்மையாகக் கண்டித்தார். தமிழ் அடையாளத்துக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கை போன்றவற்றை எதிர்த்துத் தொடர்ந்து தி.மு.க போராடி வருகிறது. நீட் தேர்வு போன்ற கொள்கைகள் தமிழ்நாட்டின் மாநில சுயாட்சிக்குச் சவால் விடுகின்றன. அதனால் பண்பாடு மற்றும் அரசியல் தளங்களில் தமிழ்ப் பெருமையை மீண்டும் மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேவை எழுகிறது.
நவீன திராவிடக் கூறுகள் திருவள்ளுவர் போன்ற புகழ்பெற்ற புலவர்களைப் போற்றுகின்றன. ஆனால் அவர்களுக்குக் காவி சாயம் பூச முயற்சிக்கிறது பாசிசம். திராவிடச் சிந்தனைகள், தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை, கல்வி, பொதுவாழ்வு ஆகியவற்றிலும் தாக்கம் செலுத்தி மாநிலத்தின் முதன்மை மொழியாக தமிழை முன்னிறுத்துகின்றன. தமிழ் அரசியல் பரப்பில் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், தி.மு.க. உருவாக்கிய இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். பா.ஜ.க.வைத் தவிர..!
தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்று சொல்லாமல் ‘தமிழகம்’ என்று சொன்னது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். ஆனால் தமிழ்நாடு அரசு எழுதிக் கொடுத்ததைப் பேச மறுத்த ஆளுநரின் உரையை நிராகரித்து முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த உணர்வு என்றும் தொடரும். நம் இரண்டு மாநிலங்களுமே நமது பண்பாட்டின் மீது அதிகப் பற்று உடையவை.
நம் இரண்டு மாநிலங்களுமே பா.ஜ.க.விடமிருந்து அச்சுறுத்தலை எதிர் கொள்கின்றன. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை, ஒரே மதம்’ என்ற நிலையை உருவாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. அதை முறியடிக்க நாம் கரம் கோர்ப்போம். அனைத்து மாநிலங்களின் மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை பா.ஜ.க.வின் பாசிசப் பிடியிலிருந்து காப்போம்.
தொடக்கத்தில் என்னைப்பற்றிய அறிமுக உரையில் பிரச்சாரத்தின் போது, மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு எதிராக நான் ஒற்றைச் செங்கல் காட்டியதை குறிப்பிட்டார்கள். அந்தச் செங்கல் இப்போதும் என்னிடம்தான் பாதுகாப்பாக உள்ளது. ஒன்றிய அரசு எப்போது மதுரையில் எய்ம்ஸ் கட்ட நிதி ஒதுக்குகிறதோ அப்போது நான் அதைத் திருப்பித் தந்து விடுகிறேன்.
இறுதியாக, நான் சொல்ல விரும்புவது, நான் திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வருகின்றேன். நான் திராவிட வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி.. இல்லாவிட்டாலும் சரி… அதை நான் என் இறுதி மூச்சு உள்ளவரை தொடர்வேன்”
என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.